அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா ஒரு சிரேஷ்ட கலைஞராக இலங்கை மக்களின் இதயங்களில் நிலைத்திருப்பார் – இரங்கல் செய்தியில் இலங்கையின் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021

ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரும், பிரபல சிங்கள பாடகருமான சுனில் பெரேரா காலமானார்.

68 வயதான இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்தார்.

இவரது பாடல்கள் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அன்னாரது மறைவையிட்டு இலங்கையின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையின் இசைக்குழு நிகழ்ச்சிகளில் புரட்சிகளை ஏற்படுத்தியதுடன் இசைத்துறைக்கு பல பிரபலமான பாடல்களை  வழங்கிய பிரபல மூத்த பாடகர் சுனில் பெரேராவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா  ஒரு பாடகராகவும் இசைத்துறையில் சிரேஷ்ட கலைஞராகவும் இலங்கை மக்களின் இதயங்களில் நிலைத்திருப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஐந்து தசாப்த காலங்களாக இலங்கை மக்களின் இதயங்களை வென்ற ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன்.

சுனில் பெரேராவின் தலைமையில் 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜிப்சீஸ் இசைக்குழு 1970களில் சிறந்த முன்னேற்றத்தை கண்டிருந்தது. குடும்பத்தின் ஐந்து சகோதரர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜிப்சீஸ் இசைக்குழுவின் ஆரம்ப காலத்தில் மேற்கத்தேய பிரபல பாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இலங்கையில் குழு இசையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினர் மேற்கொண்ட செயற்பாடு அளப்பரியது. ‘லிந்த லங்க சங்கமய’, ‘அம்மா அம்மா’ போன்ற ஜிப்சீஸ் குழுவினரின் முதலாவது சொந்த படைப்புகள் மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன.

அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா ஒரு பாடகராகவும், இசைத்துறையில் சிரேஷ்ட கலைஞராகவும் இலங்கை மக்களின் இதயங்களில் என்னென்றும் நிலைத்திருப்பார் என்பது எனது நம்பிக்கை.

தனது 68 ஆவது வயதில் காலமான சுனில் பெரேரா அவர்களின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: