அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள் – இறங்கி துப்பறவு செய்யுங்கள் – மாற்றம் கிடைக்கும் என ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

சௌமிய மூர்த்தி தொண்டமான் எமக்கு பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார். ஆறுமுகன் தொண்டமான் கல்வி மற்றும் சமூகத்தை பாதுகாத்தார். எனக்கு அந்த அளவு செய்ய முடியாவிட்டாலும் கூட என்னை பொறுத்த வரையில் மலையகத்தில் படித்த இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் மலையகம் மாற்றம் பெறும் என தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்ட அமைப்பு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை – இலங்கை சமுதாய பேரவையுடன் இணைந்து நாவலபிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் மூன்று திறன் வகுப்புக்கள் மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
தொடர்ந்தும் அதே பழைய அரசியலை நாம் செய்து கொண்டிருந்தால் நாம் உருப்பட போவதில்லை என தெரிவித்த ஜீவன் தொண்டமான், மாணவர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள். அதனை இறங்கி துப்பறவு செய்யுங்கள். புத்தகங்களும் நான்கு சுவர்கள் மாத்திரம் எமது வாழ்க்கையல்ல. அதனையும் தாண்டி ஒரு வாழ்க்கையுள்ளது என வும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் ஏனைய மாவட்டங்களை போல் எமது பிரதேசமும் அபிவிருத்தியடைய வேண்டும் என்றால் அதற்கு கணணி கல்வியினை விருத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|