அரசியலுக்காக தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன – வேலணை மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, April 15th, 2021

வேலணைப் பொது மீன் சந்தை தொடர்பாக அரசியல் நோக்கங்களுக்காக தவறான செய்திகள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினால் நிர்வகிக்கப்படும் வேலணை பிரதேச சபையினால் வேலணை மீன் சந்தை பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த சந்தையில் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் சுகாதார ரீதியான குறைபாடுகள் காணப்படுவதாகவும், சரியான முறையில் சந்தை பராமரிக்கப்படவில்லை எனவும் ஊடகம் ஒன்றினால் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

விமர்சனங்கள் நியாயமானவையாகவும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பின், அவை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு அமைய, குறித்த செய்தி தொடர்பாக  உண்மைகளை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில்,  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே. குகேந்திரன் ஜெகன், வேலணை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சந்தை பகுதிக்கு இன்று நேரடியாக விஜயம் செய்து நிலமைகளை ஆய்வு செய்தனர்.

இதன்போதே வேலணை சந்தை தொடர்பாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்பதும் வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்த பிரதேசத்தினை சேர்ந்த பெண்மணி ஒருவர், கடந்த வாரம் சந்தைப் பிரதேசத்திற்கு வருகைதந்த ஊடகம் ஒன்று, சந்தையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், குறிப்பிட்டு சொல்லும் வகையில் குறைபாடுகள் எவையும் இல்லை என்று தான் கூறியதுடன், குறித்த ஊடகத்தின் அரசியல் நோக்கத்தினை புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கருத்து தெரிவித்த சந்தை வியாபாரி ஒருவர், மீன் சந்தையில் சாதாரணமாக தினந்தோறும் உருவாகின்ற கழிவுகளை படம் பிடித்து பாரிய சுகாதார சீர்கேடாக குறித்த ஊடகத்தினால் சித்தரிக்கப்பட்டதாகவும், குறித்த கழிவுகள் தினந்தோறும் வியாபார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தம்மால் முறைப்படி அப்புறப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் வாதி ஒருவருக்கு சொந்தமான யாழ்ப்பாணத்தினை தளமாக கொண்ட ஊடகம் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தவறான செய்திகளை பரப்புவதாகவும் சந்தை வியாபாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் அமையுமாயின  அவை தொடர்பாக வெளிப்படுத்துவதை வரறே்பதாக சுட்டிக் காட்டியதுடன், ஒரு சிலரின் அரசியல்  நோக்கங்களுக்கு துணைபோக வேண்டாம் என்று சந்தை வியாரிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

மேலும், வேலனை பிரதேச சபையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்துலுக்கு  அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் பிரதேச மக்களின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: