அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 தலைவிகளுக்கு நாடாளுமன்றத்தில் செயலமர்வு!

Thursday, September 15th, 2022

உள்ளூராட்சிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டு தலைவிகளுக்கான விசேட விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது..

அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாள்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் (பதில்) பணிப்பாளர் ஜனகாந்த சில்வா, நாடாளுமன்ற நிர்வாகப் பணிப்பாளர் தட்சனாராணி, படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து, பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, நாடாளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாதியல்தெனிய மற்றும் பொதுச் சேவைகள் முகாமையாளர் புத்தினி ராமநாயக்க ஆகியோர் இதில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

ஜனநாயக ஆட்சிமுறையில் பெண்களின் வகிபங்கு, சட்டவாக்கம் உள்ளிட்ட நாடாளுமன்ற அலுவல்கள், நிலையியற் கட்டளைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விழிப்புணர்வு இடம்பெற்றதுடன் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதற்கு மேலதிகமாக, நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (National Democratic Institute/NDI) அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பஃவ்ரல் அமைப்பும் ஒருங்கிணைப்பில் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: