அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களே நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படக் காரணம் – கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டு!

Thursday, July 22nd, 2021

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் காரணமாக நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்படுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே போராசிரியர் திஸ்ஸ வித்தாரண இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கணக்குகள் குழுவின் இந்த அறிக்கை பல விபரங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை என்றும், இதன் ஊடாக இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இப்பரிந்துரைகள் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் கணக்காய்வு நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும், பல நிறுவனங்கள் தேசிய இறைவரித் திணைக்களத்துக்கு 05, 06 வருடங்கள் வரி செலுத்தாமல் இருப்பதாகவும், இதனால் இழக்கப்பட்ட வரித் தொகை அதிகமானது என்றும் இதன்போது பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வரித்தொகை தொடர்பில் குறித்த நிறுவனங்களால் இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்யவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நிறுவனத்தினால் மூன்று தடவைகள் மேன்முறையீடு செய்வதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும், இதன் காரணமாக வரி செலுத்துவது பல வருடங்கள் காலதாமதம் அடைவது மாத்திரமன்றி அதன் பின்னர் இவற்றுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுப்பதால் வரியைச் செலுத்த அதிக காலம் எடுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேன்முறையீடு செய்வதற்கு ஆறு மாத காலம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த கோபா குழுவின் தலைவர், இக்காலப் பகுதி வரையறுக்கப்படுவதுடன், மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றாகக் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: