பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கொத்தணி பரவ வாய்ப்பு என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!!

Monday, January 24th, 2022

நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய வகுப்பறைகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இது தொட்ர்பில் அவர் மேலும் கூறுகையில் –

அதிகளவான மாணவர்கள் மற்றும் போதிய இடவசதி இல்லாத வகுப்பறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையளாம் காணப்படுகின்றனர் என்றும் இது கொத்தணிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அவதானமாக இருந்தால் இவ்வாறான நிலைமையை ஓரளவு தவிர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

கொரோனா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மேலும் 15 கொரோனா மரணங்கள் நேற்று (23) அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: