அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை – சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Monday, March 4th, 2024

அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபையின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயர் மட்டத்தில் அரச சேவையை கட்டியெழுப்புவது மற்றும் பணி ஒத்துழைப்பின் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த பொறிமுறையானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரச சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கு முன்மொழியப்பட்ட பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு இணங்க இந்த சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தேச புதிய பொறிமுறையானது முழு அரச சேவையிலும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் பணியிடங்கள் மற்றும் தேசிய மட்டம் ஆகிய நிலைகளில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவுடன் சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறைகளிலும் பல்வேறு பணியிடங்களிலும் இந்த வழிமுறை ஏற்கனவே முன்னோடி திட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பொது நிறுவனங்களுக்குள் காணப்படும் ஊழியர்களுக்கிடையிலான முறுகல்களை தீர்ப்பதற்கும் முகாமைத்துவ சேவைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பணியிடங்கள் மறுசீரமைப்பின் மூலம் பொது சேவையின் செயற்திறனை மேம்படுத்துவதும் பொது சேவையின் தரத்தை அதிகரிப்பதும் இந்த பொறிமுறையை செயற்படுத்துவதன் நோக்கமாகும் என்றும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: