அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – அமைச்சர் ஹெகலிய வலியுறுத்து!
Saturday, March 20th, 2021
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக்காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறான நடவடிக்கையை நிறுத்துமாறு அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
“பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்த பின்னர் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசுக்கு எதிராகவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பெரும் எடுப்பில் போராட்டங்களை நடத்துவது வழமை.
ஆனால், இம்முறை இந்தப்போராட்டங்கள் உச்சமடைந்துள்ளன. அரசையும் பெரும்பான்மை இனத்தவர்களாக இருக்கும் சிங்களவர்களையும் சீண்டிப்பார்க்கும் வகையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் பின்னணியில் புலம்பெயர் அமைப்புகளின் கோடிக்கணக்கான நிதிதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” எனத் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


