ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும்!

Thursday, January 19th, 2017

வடமாகாண ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ்.பிரஜைகள் குழு இணைந்து அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில்,

கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரியர்களால் இடமாற்றம் கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வில் பங்குபற்றிய இரு ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் வழங்கபட்ட ‘பணித்தடை’ உத்தரவு ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் செயற்பாடாக அமைந்துள்ளமையை – வடமாகாண தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றது.

வடமாகாணக் கல்வித்திணைக்களத்தால் இடமாற்றங்கள் பாரபட்சமாகவே தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றுவரை 2017 இற்குரிய வருடாந்த இடமாற்றமும் நீதியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை.

2017 வருடாந்த இடமாற்றத்தில் வெளிமாவட்டங்களில் சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கங்களுடன் இணைந்து எட்டப்பட்ட தீர்மானத்துக்கமையவே இடமாற்றங்கள் வழங்கப்பட்டன என தெரிவிக்கும் அதிகாரிகள் வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு ஆசிரிய ஆளணி வழங்க  இலங்கை ஆசிரியர் சங்கம் இடமாற்றச் சபையில் விதித்த நிபந்தனைகளுக்கு இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

(இதற்கு ஆதாரமாக, வடமாகாண கல்வித்திணைக்களத்திலுள்ள 2017 வருடாந்த இடமாற்றத்துக்குரிய இடமாற்றச் சபை உறுப்பினர்களால் கையொப்பம் இடப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொள்ளலாம்.)

பாரபட்சங்களும், நீதியற்ற நடைமுறைகளுமே பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

இவ்வாறான சூழலில் தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாக தமது சொந்த வலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி 10.01.2017 அன்று காலை முதல் மாலை வரை செயலாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாரிகளின் முடிவுகளில் திருப்தியுறாத நிலையில் அவர்களின் கோரிக்கைகளை சிறுமைப்படுத்தும் விதமாக கல்வியமைச்சின் செயலாளரின் வாகனம் செல்ல முற்பட்டவேளை ஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்திருந்தனர். இதன்போது சிலர் காயமடைந்தனர். அத்துடன் செயலாளரின் வாகன சாரதியும் ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் செயலாளர் பூட்டப்பட்டிருந்த முன்கதவினூடாக ஏறிப் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார்.

இதனையறிந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தோம் காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.

ஆனால் ஆசிரியர்கள் காயமடைந்த நிலையில் செயலாளர் தற்காப்பு முயற்சியாகவே முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகிறது.இவ்வாறான சூழலில் இரு ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இது ஜனநாயக உரிமையை நசுக்கும் செயற்பாடாகாவே நாம் கருதுகின்றோம்.

வடமாகாண கல்வித் திணைக்களம் மேற்கொள்ளும் பாரபட்சங்களின் உச்சத்தில் தாம் இழைக்கும் அநீதிகளை நியாயப்படுத்தியும் ஜனநாயக உரிமையை நசுக்கியும் செயற்பட முன்வந்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது இடமாற்றங்களைக் கோரி கவனயீர்ப்பு செய்தமை ஆசிரியர்களின் ஜனநாயக ரீதியான உரிமையாகும். இதனை சிறுமைப்படுத்த முயற்சித்தவேளையிலேயே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக கருதுகின்றோம்.

ஆயினும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தாபன விதிக்கோவையில் அதிகாரிகளை மதிக்காமை போன்ற காரணங்களைக் காட்டி ஜனநாயக உரிமையை நசுக்க முடியாது.

தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பாகும். இதற்கு எடுத்துக்காட்டாக கொழும்பின் பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பாடசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல்  வழங்கியமைக்காக  தாபன விதிக்கோவைக்கமைவாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அதிபர் உட்பட அதிகாரிகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் தன்னை பணிநீக்கம் செய்தமை சட்டவிரோதமானது என அறிவிக்கும்படி கோரியிருந்தார். இந்தநிலையில் கடந்த 2016 செப்டெம்பர் 28 ஆம் திகதி இப்பணிநீக்கம் காரணமாக குறித்த  ஆசிரியையின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், எனவே பிரதிவாதிகள் இருவரும் ஒரு லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த ஆசிரியர்களின் பணிநீக்க விடயம் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவை உடனடியாக விலக்கி ஜனநாயக உரிமையை நிலைநாட்ட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ceylonteachersunion

Related posts: