அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது – இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023

அரசாங்கம் தற்போது அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை. மாறாக நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது. எனவே எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போன்று அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என ஊடக இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, மக்களுக்கு எதிரானதல்ல. இதன் ஊடாக மக்களுக்கு எவ்வித துன்புறுத்தல்களும் இடம்பெற மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, மக்களுக்கு எதிரானதல்ல. எனவே எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போன்று மக்கள் இதுகுறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

காலத்திற்கு தேவையான புதிய விடயங்களை அறிமுகப்படுத்தும் போது, அவற்றில் குறை காண்பவர்கள் தற்போதும் அதனையே செய்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனில் முறையான சட்ட கட்டமைப்பு அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கமைய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கமைய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுமே தவிர , மக்களுக்கு எவ்வித துன்புறுத்தல்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது.

அரசாங்கத்திடம் தற்போது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பெரும்பான்மை பலம் காணப்படுகிறது. எதிர்க்கட்சியினர் இணையவில்லை என்பதற்காக அரசாங்கம் வீழ்ச்சியடைப் போவதில்லை.

அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் நடவடிக்கைகள் வெற்றிகரமானவை என எண்ணினால் , விரும்பும் எவரும் எம்முடன்  இணையலாம்.

அரசாங்கத்துடன் இணைய விரும்புபவர்களை அச்சுறுத்துவதற்காகவே அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறு பணத்தைக் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

அரசாங்கம் அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை. மாறாக நாட்டின் முன்னேற்றம் குறித்தே அவதானம் செலுத்தியுள்ளது. எனவே அமைச்சரவை மாற்றங்கள் எவையும் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: