அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்து!

Wednesday, January 5th, 2022

அரசாங்கத்தை விமர்சிக்கும்போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களும் அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக்கூடாது எனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தை விமர்சித்தமை குறித்து கடும் சீற்றமடைந்திருந்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயலா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எந்த அரசாங்கமும் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணவேண்டும் என்றும் பொது அரங்கில் விமர்சிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: