அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்க காங்கிரசின் நீதித்துறை குழுவினர் பாராட்டு!
Saturday, February 25th, 2017
இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரசின் நீதித்துறை தொடர்பான மேற்பார்வை குழுவின் தலைவர் பொப் குட்லெட் தலைமையிலான பிரதிநிதிகள் சமகால கூட்டணி அரசாங்கத்தின் கடந்த இரண்டு வருட பயணப் பாதையும் அதன் வெற்றியையும் பாராட்டி பேசியுள்ளனர்.
அமெரிக்க காங்கிரசின் நீதித்துறை தொடர்பான மேற்பார்வை குழுவின் தலைவர் பொப் குட்லெட் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்குமிடையலான சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே இவ்வாறு குழுவினர் பாராட்டியுள்ளனர்.
நல்லிணக்கம், ஜனநாயகம் என்பனவற்றை உறுதிப்படுத்தவும், பொருளாதார கொள்கை தொடர்பாகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டி பேசினார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி சகல நாடுகளுடனும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகுமென்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுப்பது இதன் நோக்கமாகும். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதும், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் பிரதான அம்சங்களாகும். இலங்கையின் பூகோள அமைவிடத்தினால் பிராந்தியத்தின் சமுத்திரவியல் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு இலங்கைக்கு காணப்படுகிறது.
இதனால் வெளிநாட்டு முதலீடுகளில் கைச்சாத்திடும் போது தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்புப் பற்றியும் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கைவிட்டிருந்தது. ஆனால் மீண்டும் அதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

Related posts:
|
|
|


