அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்!

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திங்கட்கிழமை எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் இன்று நண்பகல் காணொளி முறையில் எளிமையாக திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேநேரம் யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பிரதேச செயலர்கள் மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குறித்த கலாசார மத்திய நிலையம் தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்கே மற்றும் இலங்கையின் மத விவகார பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் கலாசார துறைசார் அமைச்சரின் செயலாளர் ஆகியோர் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த பண்பாட்டு மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.
1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் இன்றைதினம் எளிமையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் கலாசார மண்டபம் என்பது வெறுமனே யாழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் புத்திஜீவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 2011 இல் இந்தியாவிற்கு மேற்கண்ட விஜயத்தின் போது அன்றைய இந்திய பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாகவே கிடைக்கப்பெற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவை முதல்வராக கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த யாழ் மாநகரசபையின் ஆட்சி காலத்தில் இதற்கான பூர்வாங்க வேலைகள் முழுமையாக நிறைவுபெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக பூரணத்துவம் பெற்ற கலாசார மண்டபம் 28/3/2022 இன்று திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
12 மாடிகளுடன் கொண்ட இக்கலாச்சார மையமானது 600 பேரை உள்ளடக்கக் கூடியதான வசதிகளுடன் கூடிய திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம், கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|