அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் – தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023

நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்றதைப் போன்று இன்னுமொரு கலவரத்தை ஏற்படுத்த, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் எதிர்க்கட்சியுடன் தொடர்புடையோரும் திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

அந்தத் திட்டத்தின் பிரகாரம் அமைச்சர்களான மஹிந்த அமரவீர மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் பிரத்தியேக இல்லங்களை சுற்றிவளைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தமையை அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியிருந்ததாகவும் காஞ்சனவின் இல்லத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நீர் பிரச்சினைக் குறித்து நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. காலநிலை மாற்றங்களுக்கு அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியாது. இதற்கு முன்னரும் இவ்வாறான நிலைமை எமது நாட்டில் இருந்தது.

எனவே, சமனலவெவ உள்ளிட்ட ஏனைய நீர்த்தேக்கங்களினூடாக மின் உற்பத்திக்கும் விவசாயத்துக்கும் நீரை விடுவிக்கும்போது, இரு முறைகளை தெரிவு செய்யும்போது அநேகமானவர்கள் உயிரிழந்தனர்.

அதன் காரணமாக ஒவ்வொரு நீர்த்தேக்கத்திலும் நீர் மட்டம் குறைவடைந்து வரும்போதும், விவசாய நிலங்களுக்கான நீரை மட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் ஶ்ரீபோதும் மின் விநியோகமா அல்லது விவசாயமா என்ற பிரச்சினை ஏற்படுகிறது.

அதில் எதனைத் தெரிவு செய்தாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவதொரு தெரிவை கைவிட வேண்டி ஏற்படும். அதற்கான செலவை ஏற்கவேண்டி ஏற்படும்.

சகல அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் மின்சக்தி அமைச்சர் நான்கு முடிவுகளையும் நாட்டுக்கு முன்வைத்திருந்தார். மின்சாரமும் அவசியமானது. மறுபுறம் விவசாயமும் எமக்கு அவசியம். அவற்றுக்கு வழங்க நீர் இல்லாவிட்டால் அதற்கு மேலதிகமாக மாற்றுத் தீர்வுகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.

அந்த மாற்று நடவடிக்கைகளுக்காகவே விவசாயத்துக்கு நீரை கொடுத்துவிட்டு, மின் துண்டிப்பை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வோம் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர யோசனை முன்வைத்திருந்தார்.

மேலும், போப்பிட்டியிலிருந்து புதிய விநியோக கட்டமைப்பின் நிர்மாண செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் அங்குள்ள சுயதொழிலாளர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர். அரசாங்கத்தால் பலவந்தமாக இதனை செய்ய முடியாது.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் விவசாயத்துக்கு நீரை விடுவித்துவிட்டு மின் துண்டிப்பின்றி மின் விநியோகத்தை வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கிடையில் தேசிய புலனாய்வுப்பிரிவுக்கு 2022 மே 09 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை போன்றே இன்னுமொரு களவரத்தை நாட்டில் ஏற்படுத்த, இந்த வறட்சியையும் நீரையும் பயன்படுத்தி ஒருசில போராட்டத்திலிருந்த சிலரும் எதிர்க் கட்சியுடன் தொடர்புடைய சிலரும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.

அதற்கமைய, 12 மணிநேரத்துக்குள் 72 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அழித்து, அச்சுறுத்தல் நிலையை உருவாக்கியதைப் போன்று மீண்டும் நாட்டில் அமைதியின்மை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பிரத்தியேக வீட்டையும் அமைச்சர் காஞ்சன விசேஜசேகரவின் வீட்டையும் சுற்றிவளைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அமைச்சர் காஞ்சனவின் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இந்த குழுக்களை திட்டமிட்ட வகையில் கொழும்புக்கு அழைத்து வந்து கடந்த வருடத்தைப் போன்று மீண்டும் நாட்டில் களவரத்தை உருவாக்கவும் திட்டமிட்டிருந்தார்கள். இதுதொடர்பில் புலனாய்வுத் துறையினர் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: