அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான சம்பள அளவுத் திட்டத்தை மாற்றவும்! வடக்கு மாகாண அரசசேவைப் பட்டதாரி உத்தியோகத்தர் சங்கம்!

வடக்கு மாகாண பொதுச்சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 111 சேவைக்கு 2018 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டவர்களது ஆள்ச்சேர்ப்பு நிபந்தனைக்கும் நியமன நிபந்தனைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. அதில் சம்பள அளவுத்திட்ட வரையறை, பயிற்சிக்காலம் என்பன உட்சேர்க்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண அரச சேவைப் பட்டதாரி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்தது. இது தொடர்பில் சங்கம் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண அரசசேவைப் பட்டதாரி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் க.கஜீதன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிதாக நியமனம் பெற்ற 100 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்களது சேவைப் பிரமாணக்குறிப்பின் பிரகாரம் ஆள்ச்சேர்ப்பின் போது எந்தவித பரீட்சைகளும் நடத்தாது கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் உள்வாங்க முடியும் என்று உள்ளபோதும் வடக்கு மாகாணத்தில் பரீட்சை ஒன்றின் மூலமே அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது அவ்வாறு இருக்க தற்போது நியமனம் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆட்சேர்ப்பு நிபந்தனை ஒன்றாகவும் நியமன நிபந்தனை வேறொன்றாகவும் காணப்படுகின்றது.
சம்பள அளவுத் திட்டம், பயிற்சிக்காலம் என்பன உட்சேர்க்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்படுவதால் அவற்றுக்குத் தீர்வு காணும் முகமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக முதலில் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடுவதன் மூலமாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வது எனவும் அந்த முயற்சி பயனளிக்காது போனால் ஆளுநர் ஊடாக நடவடிக்கை எடுப்பது எனவும் ஆளுநரும் உரிய தீர்வைத்தராத பட்சத்தில் நீதிமன்றின் உதவியை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் எமது கோரிக்கைகள் நியாயமானதாகவும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் காணப்படுவதால் மாகாண நிர்வாகத்தாலேயே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்று வடக்கு மாகாண அரச சேவைப் பட்டதாரி உத்தியோகத்தர் சங்கம் முழுமையாக நம்புகின்றது என்றுள்ளது.
இவர்களுக்கான நியமன கேள்விகோரல் அரசிதழில் சம்பள அளவுத் திட்டம் முகாமைத்துவ உதவியாளர்களுக்குரிய அளவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது மீறப்பட்டுள்ளது என்றும் சங்கம் கூறுகிறது
Related posts:
|
|