அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைகளை வழங்க வேண்டும் – அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, March 16th, 2024

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை உரிய முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மக்களுக்காக அமுல்படுத்தப்படும் “அஸ்வசும” “உருமய”, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், “கந்துரட்ட தசகய” வேலைத் திட்டம் ஆகியவற்றின் வெற்றிக்கு தீவிரமாகப் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்த அனைத்து வேலைத் திட்டங்களின் பலன்களும் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்..

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்துள்ளார்.

“வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் பேர் பயனடைவதுடன் அந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக அதிகரிக்கப்படும். அதற்காக 183 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும், 20 இலட்சம் குடும்பங்களுக்கு “உருமய” நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களிலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் 11,250 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

“கந்துரட்ட தசகய” வேலைத் திட்டத்தை 11 மாவட்டங்களிலும், 93 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 4,401 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 26 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இரண்டாம் கட்டமாக 75 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே எதிர்பார்க்கப்பட்டுள்ள அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு இந்த நிதிகளை முறையாகச் செலவிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்..

இதேவேளை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நவீன விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழிற்படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: