அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் — ஜனாதிபதி கோட்டாபய!

Sunday, April 5th, 2020

இலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து ஏனை பகுதிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய சிங்கள – தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.

நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடிதுயுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலைமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாட இணக்கம் காணப்பட்டது.

Related posts: