அனைத்துக் கிராமங்களும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி – ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பொறிமுறை தயாராகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, November 27th, 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவான “உறுமய” தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை அனுராதபுரம் நொச்சியாகமவில் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஷங்ரிலா ஹோட்டலுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க முடியுமாயின், எமது நாட்டில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதில் என்ன தவறு என ஜனாதிபதி இங்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷங்ரிலா அமைந்துள்ள காணியினால் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைப்பதைப் போன்றே நவீன விவசாயக் கைத்தொழில் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள விவசாயம் செய்யும் மக்களுக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதென்பது அவர்களின் முன்னோர்களின் பாரம்பரியத்தை வழங்குவதாகவே இருக்கும் என்பதோடு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2024 வரவு செலவுத் திட்டத்தில் “உறுமய” காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் நிலங்களை கையகப்படுத்திய பின்னர், அந்த நிலங்களில் பயிரிடுவதற்கு பூர்வீக மக்களுக்கு உரிமம் வழங்கியிருந்தனர்.

ஆனால் 1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் ஊடாக உள்நாட்டவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு மற்றொரு அனுமதிப் பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. காணியை வைத்திருப்போருக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் வீடுகளை கட்டவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தின் உரிமையை மற்றவருக்கு மாற்றவோ விற்கவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஜயபூமி, சௌமிய பூமி, ஸ்வர்ணபூமி, போன்ற அனைத்து காணி உறுதிகளுக்குப் பதிலாக காணி உறுதிப்பத்திரம் வழங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் இந்த அனுமதிப் பத்திரங்க ளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களுக்க அறிவுறுத...
எலிசபெத் மாகாராணியின் இறுதிச் சடங்கிற்காக உலக தலைவர்கள் இலண்டன் வருகை – பல இராஜதந்திர நடவடிக்கைகளில்...
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல...