மெக்ஸிகோவுடன் ஒரு தசாப்ததுக்கு பின்னர் இராஜதந்திர உறவுகளை புதுபிக்கும் இலங்கை!

Thursday, October 26th, 2023

மெக்ஸிகோவுடன் ஒரு தசாப்ததுக்கு பின்னர் இராஜதந்திர உறவுகளை புதுபிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, இதற்கான ஆரம்ப ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சுகள் இதற்கான முழு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதுடன், மெக்ஸிகோவின் இராஜதந்திரிகளை அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க சந்தித்து கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.

இதனிடையே இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகள் சந்திப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியதால் அண்மையில் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்று அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோவிற்கு சென்றது.

இலங்கைக்கும் மெக்ஸிகோவிற்கும் இடையில் சமூக பொருளாதார, அரசியல், மனித உரிமைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இருநாட்டு இராஜதந்திரிகளும் உடன்படிக்கையொன்றை இதன்போது கைச்சாத்திட்டனர்.

தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கும் மெக்ஸிகோவின் வெளியுறவு பிரதியமைச்சருக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வெளியுறவு அமைச்சர் கார்மென் மொரேனோ டோஸ்கானோவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

தூதுவர் மஹிந்த சமரசிங்கவுக்கும் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது – இலங்கை எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவர் மஹிந்த சமரசிங்க விளக்கமளித்தார்.

IMF கடன் திட்டம், கடன் மறுசீரமைப்பு திட்டம், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இருநாட்டு பொருளாதார உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் இந்தச் சந்திப்பில் அவதானம் செலுத்தினர்.

கொழும்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இணக்கப்பாடு எட்டப்பட்டடமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: