அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023

எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய அமைச்சரவை புதிய வழியில் சிந்திக்கும் அமைச்சரவை ஆகும். இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. சில அமைச்சர்கள் இதற்கு அதிசொகுசு கார்களை சேர்க்கவும் மற்றும் பெட்ரோல் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறும் முன்மொழிந்தனர்.

எதிர்காலத்தில் நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும் என அரசாங்கத்தின் தீர்மானம் ஒன்று உள்ளது. நாம் மின்சார வாகனங்களுக்கு செல்ல வேண்டும். அதனால்தான் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில், இந்த நாட்டில் அரசாங்கம் என்ற வகையில், முடிந்தவரை மின்சார வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளோம். எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு கொண்டு வரப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்கள் என்ற தீர்மானம் முன்னதாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: