மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவினரால் மாணவி மீது தாக்குதல்: இருவர் கைதாகி விடுதலை!

Saturday, July 14th, 2018

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு அருகில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழு மாலை நேரவகுப்பு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை தாக்கியமை தொடர்பில் அப்பாடசாலை மாணவர்களால் கற்றல் புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 5.45 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் பாடசாலை மைதானத்தில் இருந்த சிலரால் கல் வீசி தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவி பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அம் மாணவியின் தந்தை குறித்த பகுதியில் நின்ற இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் கூறி எச்சரித்துள்ளார். அதன் பின்னர் மாலை குறித்த மாணவியின் இல்லத்திற்கு சென்ற குழுவினர் சிறுமியின் வீட்டினை தாக்கி சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இரண்டு பேரைக் கைது செய்த பொலிஸார் அவர்கள் இருவரையும் உடனேயே விடுவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைக் கண்டிக்கும் முகமாகவும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறும் தெரிவித்து நேற்று வியாழக்கிழமை கனகாம்பிகைக்குளம்  பாடசாலை மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளாது புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் பெற்றோரும் கூடியிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கரைச்சி கோட்ட அதிகாரி மற்றும் பொலிஸார் வருகை தந்து பாடசாலை அலுவலகத்தில் பேச்சு நடத்தினர். தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரால் உறுதி வழங்கப்பட்டதையடுத்து கற்றல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் 18 வயதுக்கு குறைந்த சிலர் இவ்வாறு மாலை நேரங்களில் நிற்பதாகவும் அவர்களில் சிலர் போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் செயற்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலை சூழலில் தம்மை பழைய மாணவர்கள் என தெரிவித்துக்கொண்டு போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதுடன் அவ்வீதியால் செல்லும் பெண்பிள்ளைகள் மீது இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முற்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதேவேளை அவர்களின் செயற்பாடு வயது வேறுபாடின்றி காணப்படுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்ததுடன் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts: