அனுமதிப்பத்திரமின்றிப் பயணித்தால் ரூ.2 இலட்சம்அபராதம்!

Thursday, April 6th, 2017

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலத்தை சபையின் அங்கிகாரத்துக்காக நேற்றுச் சமர்ப்பித்தார்.

மேற்படி சட்டமூலத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தென்பகுதி மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களே அதிகமாக வழித்தட அனுமதிப் பத்திரமின்றிப் பயணிப்பதாகக் குறிப்பிட்டார்.

“வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் அதற்கான தண்டப் பணமான 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்திவிட்டு மீண்டும் அனுமதிபத்திரமின்றியே சேவையில் ஈடுபடுகின்றன. இதனால் அனுமதிப்பத்திரம் பெற்று உரிய முறையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஏனைய பஸ் உரிமையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதனைக் கவனத்திற்கொண்டு வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களிடமிருந்து 2 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது” என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

வழித்தட அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பான சட்டம், 2005 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இதற்கமைய பகிரங்க கேள்விமனுக் கோரல் முறையின் ஊடாக தனியார் பஸ்களுக்கு வழித்தட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. இருந்தபோதும் மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பல பஸ்கள் வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடுகின்றன.

சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு இரண்டு முறையில் வழித்தட அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாக மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடவும் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அது மட்டுமன்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், பணம் அறவிடுதல் உள்ளிட்ட பொறுப்புக்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து தென்பகுதிக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களே அதிகமாக வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்த பஸ்கள் வெள்ளவத்தையில் இருந்து புறப்படுகின்றன. இதனால் சில பஸ்கள் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுகின்றன. இதனால் சட்டத்தை மதித்துச் செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. இதனை தடுக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதுடன், பொலிஸாரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துள்ளோம்.

சில பஸ் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற வரையறைகளுக்கு உட்பட்டதாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: