அனல் மின் நிலையங்களுக்கு அனுமதியில்லை!

Thursday, September 15th, 2016

இனிவரும் காலங்களில் இலங்கையில் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் அமைப்பதில்லையென தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கருத்தில் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுத்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பூர் அனல்மின்நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து கேட்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

கற்பிட்டியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எனினும் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின்நிலையங்கள் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இனிமேல் எந்தவொரு அனல் மின்நிலையத்தையும் அமைப்பதில்லையெனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். சம்பூரில் அனல்மின்நிலையத்தை அமைப்பதில்லையென அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

அதேநேரம், சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைப்பதால் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும். சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் இதற்கு அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவில் சந்தித்தபோது கூறியிருந்தார். இதற்கமைய இரு நாட்டுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு சம்பூர் அனல்மின்நிலையத்தை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், மாற்று சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி மற்றும் எல்.என்.ஜியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும் இவை குறித்து இன்னமும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு

பதிலாக இயற்கை வாயு நிலையம்

மின்சக்தி அமைச்சு ஆராய்வு

கைவிடப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு பதிலாக இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பது குறித்து மின் சக்தி புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதனை எங்கு நிர்மாணிப்பது என இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் மேல் மாகாணத்தில் அது அமைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை அரசாங்கத்தினதும் மின்சக்தி அமைச்சினதும் நிலைப்பாட்டிற்கமைய சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதை கைவிடுவதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் மின்சாரத்திற்கான கேள்வி உயர்வடைந்து வருகிறது. இதற்கு முகம் கொடுப்பதற்கு உகந்த மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர்களடங்கிய நிபுணத்துவ குழுவொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் நியமித்துள்ளார். குழுவின் அறிக்கையின் பிரகாரம் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

சம்பூர் அனல்மின் நிலையத்தின் ஊடாக 1,500 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்பு தீர்மானித்திருந்தது.

எனினும் அந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு மின் நிலையத்தின் ஊடாக ஏற்கனவே திட்டமிட்ட 1,500 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமெனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. எம். எஸ். படகொட தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, சம்பூரில் அனல்மின் நிலையத்தை அமைக்க போவதில்லை என அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இதுகுறித்து சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார். சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே சட்ட மா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரட்ணம் இந்த விடயம் குறித்து தெரிவித்திருந்தார். மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது தெரிந்ததே.

colcoalpowerplant175519482_4758186_14092016_mff_cmy

Related posts: