அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Friday, March 24th, 2017

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவிற்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களான த.மகேஸ்வரன், மாட்டின் ஜெயா ஆகியோர் கலந்துகொண்டு அண்மைக்காலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலான விடயமாக அமைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள், சிரமதான முறையில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பில் காலம் காலமாக ஏற்படும் வெள்ளம், வரட்சி தொடர்பான இயற்கை அனர்த்தங்களுக்கும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக கையாளப்பட வேண்டிய அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் நீண்டதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் ஊடாக ஏற்படுத்தித் தருவதாக ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்களிடம் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

அண்மைக்கால அவசர செயற்பாடுகளின் நிமித்தம் குறித்த சந்திப்பானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: