அத்துமீறல் தொடர்ந்தால் கைது தொடரும் – அமைச்சர் அமரவீர!

Saturday, May 27th, 2017

இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறினால் கைது நடவடிக்கை மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் தொடரும்’ என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த காலத்தில் இந்திய மீனவர் தரப்புடன் இலங்கை அரசியல் தரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.

அதேபோல அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகளும் எடுத்த முடிவின் அடிப்படையில் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

குறிப்பாக இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இலங்கையின் வடபகுதி மீனவர்களைப் பெரிதும் பாதித்திருந்த நிலையில் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னிடம் முறையிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்தே இந்திய தரப்புடன் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் எங்களது கோரிக்கைகளை இந்திய தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக சட்டவிரோதம் எனக் கருதி இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமையில் எக்காரணத்தைக் கொண்டும் இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிகளை மேற்கொள்ளக் கூடாது என்பதையும் அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும் என்றும் நாங்கள் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அண்மைக் காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிச் சம்பவங்கள் ஐம்பது சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களது மீனவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டே செயல்பட்டு வருகிறோம். மேலும் இலங்கையின் வசம் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைகளை ஏற்று 42 படகுகளை விரைவில் விடுவிக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்தியத் தூதரகத்துக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளோம். எனினும் எங்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டே படகுகள் விடுவிக்கப்படும். எங்களது நிபந்தனைகளை மறுக்கும் பட்சத்தில் படகுகளை விடுவிக்க மாட்டோம். அதேபோல படகுகளை நாங்கள் மீண்டும் வழங்குகின்றோம் என்பதற்காக இந்திய மீனவர்களின் படகுகளைக் கைப்பற்ற மாட்டோம் என்று அர்த்தமில்லை. இப்போது படகுகளைக் கொடுத்தாலும் எங்கள் எல்லைக்குள் அத்துமீறும் படகுகளை நாம் தொடர்ச்சியாகக் கைப்பற்றுவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

Related posts:

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமா என்ற செய்தி வதந்தியே - நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்ம...
மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்ச...
காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்ப...