அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021

24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி அமைச்சர் தினேஸ் குனவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் உடனான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை ஆசிரியர் சங்கம் நிராகரித்துள்ளதா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சுற்றறிக்கை முதலானவை இன்னும் வெளிவரவில்லை என்றும் அவை வெளிவந்த பின்னர் ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் 24 வருடங்களாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழி வகுக்கும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: