அதிகாரிகள் குளறுபடிகளால் ஆசிரிய நியமனம் இழுபறிப்படுகிறது – விரைவில் வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை!

Thursday, January 17th, 2019

வடக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி காரணமாகவே நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பட்டதாரிகள், நியமனத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுள்ளனர்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்பப் பாடங்களின் வெற்றிடங்களுக்காகப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. கிடைத்த விண்ணப்பங்கள் வெற்றிடங்களின் எண்ணிக்கையை விட குறைவாகக் காணப்பட்டதனால் எழுத்துப் பரீட்சை இன்றி நேரடியாகவே முகப் பரீட்சை என்று தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்ததால் வடக்குமாகாண ஆளுநரின் அனுமதிபெற்று நியமனம் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டியிருந்தனர். சுமார் 400 வெற்றிடங்கள் உள்ள நிலையில் 300 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. பட்டியலில் புதிதாகப் பட்டம் பெற்று வெளியேறிய நிலையில் சான்றிதழ் வழங்கப்படாத 34 பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டனர். அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் வரையில் காலம் கடத்த முற்பட்டதனால் ஏற்கனவே சான்றிதழ் பெற்ற 270 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுதொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்ததாவது –

உறுதிப்படுத்தல் சான்றிதழைக் கையில் பெற்றுக்கொள்ளாத 34 பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களைத் தவிர்த்து ஏனையவர்களுக்கு நியமனம் வழங்க முற்பட்டபோதும் வழங்கப்படவில்லை. இதற்கான அனுமதியைப் பெற்று உரிய முறையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த டிசெம்பர் 19 ஆம் திகதி நேர்முகத் தேர்வு இடம்பெற்றபோதும் ஜனவரி 13 ஆம் திகதி வரையில் ஆளுநர் வடக்கில் பணியாற்றிய காலத்தில் நியமன அனுமதியைப் பெற்று வழங்கியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் டிசெம்பர் மாதமே நியமனம் வழங்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டமைக்கமைய வழங்கப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts: