அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க அறிவிப்பு!

Tuesday, April 18th, 2023

புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்திலும் தொடர எரிச்கதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று முதல் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களின், நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர், அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்வதா என்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னரான எரிபொருள் பாவனையை ஆராயும் கூட்டம் இன்று இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 4ம் திகதி நள்ளிரவு முதல், வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம், 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு, 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகள் மற்றும் சிற்றூர்திகளுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரில் இருந்து 70 லீற்றராகவும், எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: