அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறையானால் மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்க முடியும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, May 9th, 2024

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால்,  மக்களின் மின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்களவு நிவாரணத்தை வழங்க முடியும் என மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன்உ மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூல தயாரிப்பு நடவடிக்கைகள் ஜூன் மாதத்தில் நிறைவடைந்ததும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெற்றோலிய உற்பத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான சபை விவாதத்தில், உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திரந்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் –

நாட்டின் தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து பயணிக்க முடியாது. அனைவரும் இதை, ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் எதிர்க்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எதிர்க்கட்சி எப்போதாவது அரசாங்கத்தை ஆட்சி செய்யுமானால்,அப்போது அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நேரிடும். நாட்டுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய மூன்று முறைமைகள் காணப்படுகின்றன.

இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

உரிய காலத்தில் மின்சார உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தாத காரணத்தாலேயே, தற்போது எதிர்க்கட்சிக்கு மின்சாரம் தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவ்வாறு மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிக்காமல் மின் கட்டணங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். அதேபோன்று மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி  இதன் மூலம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்  இதற்கு எதிராக எதிர்க்கட்சி குரல் எழுப்புகிறது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: