புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Sunday, April 29th, 2018

பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அந்தந்தப் பிரதேசங்களில் இருக்கின்ற பொது அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அவ்வாறானதொரு கட்டமைப்புக்களை உருவாகும் போதுதான் அபிவிருத்திக்காக காத்திருக்கும் கிராமங்கள் விரைவாக உயர்ச்சிகாணமுடியும் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

புங்குடுதீவு இறுப்பிட்டி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக இப்பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் முன்னிற்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த கட்டமைப்பை இக்கிராமத்திற்காக உருவாக்கிய புலம்பெயர் தேச மக்கள் மிகவும் மதிக்கப்படுவதுடன் நன்றி கூறப்படவேண்டியவர்களுமாவர்.

கடந்த காலங்களில் தீவகத்தின் குறிப்பாக வேலணை பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளிலும் இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் என எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு விஷேட திட்டங்களையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார். இதன் பயனாகவே இப்பகுதிகளில் இன்று பல தேவைகளை மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

ஆனாலும் முழுமையான அபிவிருத்திக்காக இன்னும் பல தேவைப்பாடுகளை இப்பகுதி வேண்டி நிற்கின்றதை அறியமுடிகின்றது. அந்தவகையில் இக்கிராம அபிவிருத்திச் சங்கம் புலம்பெயர் தேச மக்களது ஆதரவுடன் தமது கிராமத்தின் அபிவிருத்திக்காக முன்னெடுத்தச் செல்லும் அனைத்து வேலைத்திட்டங்களுடனும் நாமும் இணைந்து அவர்களுக்கான தேவைப்பாடுகளையும் உதவித்திட்டங்களையும்  பெற்றுக்கொடுத்து இக்கிராமத்தை வளமான பிரதேசமாக மாற்றுவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவோம் என்றார்.

Related posts: