அடுத்த வருடத்தில் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வழி கிடைக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, December 17th, 2020

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நத்தார் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மட்டுப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நத்தார் பண்டிகையின்போது ஏனைய மக்களை போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நினைப்பதாக கூறியுள்ளார். மேல் மாகாணத்தில் கொரோனா நிலைமை பாரதூரமாக உள்ளதால் கொழும்பிற்குள் பிரவேசிப்பதையோ அல்லது கொழும்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்வதையோ இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மக்களிடம் கோரியுள்ளார்.

இம்முறை நத்தாரின்போது உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்காவிட்டால், ஏனைய பகுதிகளிலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளார். அத்தோடு, வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துமாறும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குறைந்தது அடுத்த வருடத்திலேனும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வழி கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: