அடுத்த சந்ததிக்கு கடன் சுமையை சுமத்தமாட்டோம் – பிரதமர்!

Friday, October 28th, 2016

தற்போதுள்ள கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி நாடுபற்றி சிந்துத்து நாட்டை முன்னேற்றுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்த முன்வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாவது பொருளாதார ரீதியான சவால்களை வெற்றி கொண்டு நாட்டை உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எமது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால பயணத்திற்கு புரட்சிகர சிந்தனைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

* தனிநபர் வருமானம் 8000 டொலர்களாக அதிகரிப்பு

* 2 பில்லியன் சனத்தொகையுள்ள வலய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள்

* பூகோள அலகுகளுடன் வேகமாக தொடர்புபட்ட தென் மேற்கு, வடகிழக்கு வாயல்கள் திறப்பு

* நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தினருக்கு சலுகை அடிப்படையில் 5 இலட்சம் வீடுகள்

* ஹம்பாந்தோட்டை பொருளாதார ஊக்குவிப்பு வலயத்தில் சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கீடு

* மோதல் நடந்த பகுதிகளில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பு

* சகல மக்களுக்கும் இணைய வசதி

* பணப் பரிமாற்றத்திற்கு பதிலாக இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் ஊக்குவிப்பு

* உயர்தர மாணவர்களுக்கு ‘லெப்’ கணனி

* அரச வியாபார நிறுவனங்களை செயற்திறனாக மாற்ற புதிய சபை

* நாடு பூராவும் 250 சந்தைகள் உருவாக்கம்

* 2019 ல் ஆசிரியர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி

* ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அவசியமான ஆசிரியர் குறைபாட்டை தீர்க்க புதிய சட்டம்

* 2017 முதல் அரச தனியார் துரையினருக்கு தொழிற் பயிற்சி

மானவம்ம முதல் மகா பராக்கிரமபாகு வரையான எமது நாட்டின் பொன்னான யுகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக அர்ப்பணிப்பு, பொறுமை, பொறுப்பு என்பவற்றுடன் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். எமது தாய் நாட்டை உயர்ந்த இடத்தில் வைக்கவும் எதிர்கால சந்ததிக்கு சிறந்த நாடொன்றை உருவாக்கவும் இதன் மூலம் இயலுமாகும்.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியும் பல்வேறு நிவாரணங்கள் அளித்தும் எமது பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். எமக்கு இன்னும் பலவற்றை சாதிக்க வேண்டியுள்ளது மக்களின் பொருளாதார மட்டத்தை உயர்த்த வேண்டும் 4000 டொலர் அமெரிக்க டொலர்களாக இருக்கும் தனிநபர் வருமானத்தை 8000 டொலர்களாக உயர்த்த வேண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 5 வீதமாக உள்ளது. இதே வேகத்தில் சென்றால் தனிநபர் வருமானம் 2033ல் தான் இரு மடங்காக உயரும்.

7 வீதமாக பொருளாதர வளர்ச்சி வீதத்தை பேணும் பட்சத்தில் 2025 ம் ஆண்டில் தனிநபர் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த முடியும். நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்ட பின்னர் கிடைக்க வேண்டியிருந்த பொருளாதார பலன்களை எமக்கு பெற முடியாமல் போனது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் எமக்கு சலுகை அடிப்படையில் கடன் தர முன்வந்துள்ளன. இதனூடாக பொருளாதாரத்தை பலப்படுத்த முடியுமாகும்.

இந்த அடிப்படையில் நிரந்தர பொருளாதார முறைமையை நாட்டில் நிலைநாட்ட அடித்தளம் இட்டு வருகிறோம். பலவீனமான பொருளாதார திட்டத்தின் பாவச் சுமையை கடந்த வருடங்களில் எமக்கு தாங்க நேரிட்டது.கடந்த 30 வருட காலத்தில் ஏற்றுமதி உற்பத்திகளில் போட்டிச் சந்தைக்கு ஏற்ற அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

தைத்த ஆடை, தேயிலை, இறப்பர், மாணிக்கக் கல், சுற்றுலாக் கைத்தொழில் போன்ற வற்றினூடாகவே இன்னும் ஏற்றுமதி வருமானம் பெறப்படுகிறது. எமது நாடு குறித்து உலக அளவில் நற்பெயர் ஏற்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் துறை குறிப்பிட்டளவு உயர்வடைந்துள்ளது. எமது நாடு குறித்து கவனம் செலுத்தாதிருந்த சர்வதேச விமான சேவை மற்றும் ஹோட்டல் கம்பனிகள் மீண்டும் இங்கு வர ஆரம்பித்துள்ளன.

வறுமை மற்றும் பின்னடைவில் இருந்து மீண்டு முன்னேறும் அபிவிருத்தி நாடாக மாறுவதற்கு எமது வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க பாரிய நேரடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும். Doing Business index எனும் சுட்டெண்ணில் உள்ளடங்கும் 70 நாடுகளில் ஒன்றாக 2020 ஆகுகையில் எமது நாட்டை மாற்றுவதே எமது இலக்காகும்.

வலய நாடுகளுடன் இலகுவாக தொடர்புபடக் கூடிய வகையில் சர்வதேச துறைமுகம் மற்றும் 3 துறைமுகங்கள் என்பவற்றை முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.மூலதன கொடுப்பனவு, குறைந்த வரி முறைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு முறையொன்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

இது தவிர ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும். உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் பூகோள சந்தை போட்டியில் இணையவும் என வர்த்தக சீராக்கல் பொதியொன்றை Trade Adjustment Package அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

எனதும் ஜனாதிபதியினதும் வெளிநாட்டு பயணங்களின் போது எமது நாட்டுக்கு சிறந்த நற்பெயர் உருவாகியுள்ளது. இதன் பலன்கள் கிடைத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதில் 2017 ஜனவரி முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் மீளக் கிடைக்கும் நம்பிக்கை எழுந்துள்ளது. இலங்கை – ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பு இணைப்பிற்காக சிரேஷ்ட அதிகாரி ஒருவரை ஜப்பான் பிரதமர் நியமித்துள்ளார்.

எமது ஏற்றுமதிகளுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மேலும் 3 வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தமும், சிங்கப்பூர், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காகவும் மத்தல விமான நிலையத்திற்காகவும் பெற்ற கடனை அடுத்த பரம்பரை வரை செலுத்த நேரிடும் என பலரும் நினைத்தார்கள் இந்த நிலைமையை மாற்றியிருக்கிறோம். இந்த கடனை சரி செய்வதற்காக உரிமைக்காக பங்கு வழங்கும் முறைமையொன்றை தயாரித்திருக்கிறோம். இதற்காக அரச தனியார் கூட்டு வியாபாரமாக முன்னெடுக்க இதனூடாக சந்தர்ப்பம் ஏற்படும். இந்த முறைமையின் கீழ் விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் முன்னேற்ற சீன கம்பனி ஆர்வம் காட்டி வருகிறது. இதனூடாக ஒரு பில்லியன் டொலரை மிஞ்ச வைக்க முடியும்.

சீனா, கொரியா, ஜப்பான் போன்ற முதலீட்டாளர்கள் இந்த பொருளாதார மேம்பாட்டு வலயங்களிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் கைத்தொழில்களை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் இங்கு உற்பத்தி செய்யும் பொருட்கள் ஐரோப்பா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்து சமுத்திரத்தை சூழ உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், மியன்மார். தாய்லாந்து. மலேசியா. சிங்கப்பூர், இந்தோனேசியா வரையான நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான சனத்தொகை காணப்படுகிறது. இது 2050 இல் 3 பில்லியனாக உயரும். இந்து சமுத்திர பாரிய சந்தையிலும் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதே எமது அபிவிருத்தி மூலோபாயமாகும். அதற்காக இந்த நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

பூகோள அலகுகளுடன் வேகமாக தொடர்புபடக்கூடிய வகையில் இரு வாயில்களை திறக்க இருக்கிறோம். இலங்கையில் முதற் தடவையாகவே இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தென் மேல் வாயில் முதலாவது வாயில் கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். இதனூடாக மாநகர அபிவிருத்தி அதிகார சபையொன்றை உருவாக்கி 8.5 மில்லியன் மக்கள் வாழக்கூடிய மேற்கு மாநகர வலயம் உருவாக்கப்படும். இது தவிர நிதி நகரத்தை கேந்திரமாக கொண்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். நுவரெலியா, பதுளை மாவட்டங்களை கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையை தொடர்புபடுத்தி மத்திய மலைநாடு பூராகவும் பரவும் உப பொருளாதார வாயில் உருவாக்கப்படும். இதனூடாக பெருந்தோட்டக் கம்பனிகள் மீளமைக்கப்படும், தேயிலை பயிற்சி செய்கை மேம்படுத்தப்படும்.

இரண்டாவது அபிவிருத்தி வாயில் திருகோணமலை துறைமுகம், வட மத்திய மாகாணம் (ரஜரட்ட) என்பவற்றை இணைக்கும் வகையிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் வகையிலும் அமைக்கப்படும். மொரகஹகந்த, மலமது ஓயா நீர்த் தேக்கங்கள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இப்பிரதேசங்களில் புது யுகம் உருவாகும். விவசாயத்திற்கு கூடுதல் காணி ஒதுக்க முடியும். உலகில் தரமான துறைமுகமாக திருகோணமலை மாவட்டம் முன்னேற்றப்படும். முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்.

நகரங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழும் நடுத்தர வர்க்கத்தினருக்காக 5 இலட்சம் வீடுகளையும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 65 ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிக்க இருக்கிறோம். மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். தோட்ட வீட்டுத் தேவையில் 65 வீதம் 2020ல் நிறைவு செய்யப்படும்.

பொருளாதார ஊக்குவிப்பு வலயமாக தெற்கில் 19 ஆயிரம் ஏக்கர் காணியை முன்னேற்றுவதோடு பயன்படுத்தாத காணிகளில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படும். இந்த காணி சீனாவுக்கு முதலீடு செய்ய வழங்கப்படும்.

எமது மறுசீரமைப்பு திட்டங்களினூடாக 10 இலட்சம் தொழில் வாய்ப்பு இலக்கை அடைய முடியும். சகல பிரஜைகளையும் வசதியான சமூகத்தின் பலன்களை அனுபவிக்கச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் எந்த இடத்திலும் வாழும் மக்களுக்கும் தாங்கக் கூடிய மட்டத்திலான பாதுகாப்பான இன்டர் நெட் வசதி வழங்கப்படும். பணப் பரிமாற்றத்திற்கு பதிலாக இலத்திரனியல் கொடுக்கல் வாங்கலை ஊக்குவிக்க இருக்கிறோம். டிஜிடல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத் திட்டம் பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

அரசுக்கு சொந்தமான சகல வியாபார நிறுவனங்களையம் வர்த்தக ரீதியில் செயற்திறனுள்ளதாக மாற்ற பொது வாணிப தொழில் முயற்சி சபையொன்று உருவாக்கப்படும். சிறு, மத்திய வியாபாரங்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பிரதேசங்களையும் சுற்றுலா பிரதேசங்களாக மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

colnisha-biswal-met-pm-ranil-18190143365_4922352_27102016_kaa_cmy

Related posts: