அடுத்த ஒருவாரத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது – சிறைச்சாலைகள் திணைக்களம்!
Saturday, June 29th, 2019
தற்போது சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதி அளித்துள்ளது.
மரண தண்டனையை அமுல்படுத்துவதை நிறுத்துவதற்காக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நோட்டீஸுக்கு அமைவாக மன்றில் ஆஜரான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே.டப்ளியூ. தென்னகோன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் யாராவது கைதிக்கு மரண தண்டனை நிறைவேறற்ப்பட உள்ளதா என்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோடாகொட சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் வினவியதற்கு பதில் வழங்கிய ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 02ம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


