06 மாதங்கள் முதல் 03 வயது வரையான குழந்தைகளுக்கு மீண்டும் ‘திரிபோஷா’- உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

Sunday, June 2nd, 2024

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாதங்கள் முதல் 03 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்த திரிபோஷாவை நிபந்தனையுடன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவுக்கு பதிலாக அரிசியிலிருந்து மற்றுமொரு போஷாக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு தமது நிறுவனம் தயாராகவுள்ளதாக லங்கா திரிபோஷா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தயாரிக்க அரைக்கும் இயந்திரம் தேவை எனவும் அதற்கு சுமார் 400 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற சிறுவர் ஒன்றியம், அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அதில் பாதி தொகையை அரசாங்கம் வழங்கினால் மீதிப் பணத்தை உலக உணவுத் திட்டம் வழங்கத் தயாராக இருப்பதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

அத்துடன் திரிபோஷா உற்பத்திக்காக உயர்தர சோளத்தை பயிரிட வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிபோஷ உற்பத்தி காலம்வரை அந்த தரத்தை பேணிச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: