நாடு முழுவதும்  நடமாடும் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ்மா அதிபர்!

Monday, November 28th, 2016

பொதுமக்கள் தம்மிடம் வரும்வரை காத்திருந்த பொலிஸார் தற்போது மக்களிடம் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை வழங்கி அவர்களது தேவைகளை அவர்கள் வாழும் பிரதேசங்களிலேயே விரைவாகப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களது தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காகவும் குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக நாடுமுழுவதும் இதுவரை 456 நடமாடும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான இறுக்கமான பிணைப்பினை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், குற்றச் செயல்களைப் பற்றிய பயமற்ற அமைதியான சூழலை உருவாக்குவதற்காகவும் இவ்வாறான நடமாடும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுவதன் நோக்கம் எனவும் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இந்த நடமாடும் பொலிஸ் நிலையங்கள் மாதம் முழுவதும் அதே பொலிஸ் பிரிவில் செயற்படும்.சமூக பொலிஸ் எண்ணக்கருவினை விளைதிறன் மிக்கதாக செயற்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தில் சம்பிரதாய பொலிஸ் செயற்பாடுகளில் இருந்து வேறுபட்டு குறித்த அரச உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்த சமூக அபிவிருத்தி செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

கிராம மக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களின் கூட்டிணைவுடன் கிராமிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பொறிமுறை இந்தக் குழுவினால் செயற்படுத்தப்படுவதாகக் குறிப்பிடும் பொலிஸ்மா அதிபர் இதன் மூலம் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நான்கு இலட்சத்து இருபதாயிரம் பேர் இந்தப் வேலைத்திட்டத்தில் குழுவாக இணைந்து செயற்படுவதாகவும குறிப்பிட்டார்.

நாடுபூராகவுமுள்ள 456 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குபவர்களாகவும், வழிகாட்டல்களை போதிப்பவர்களாகவும், பொதுமக்கள் தலைவர்களாகவும் நிறைவேற்றுத் தரத்தில் பணிபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் ஐயாயிரம் உள்நாட்டு புத்திஜீவிகள் இந்த வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இந்த சமூக பொலிஸ் எண்ணக்கருவின் பிரதான நோக்கம் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் குற்றச் செயல்கள் மற்றும் வாகன விபத்துக்களை இருபது வீதத்தால் குறைப்பதாகும்.

சமூக பொலிஸ் எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்தும் போது தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுததல், குற்றச் செயல்களைத் தடுத்தலும் கட்டுப்படுத்தலும், போதைப் பொருள் மற்றும் துஷ்பிரயோகங்களை தடுத்தலும் கட்டுப்படுத்தலும், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தலும் வீதிப் பாதுகாப்பும், பொது வேலைகளில் ஈடுபடுதல், கல்வி, விளையாட்டு, களியாட்ட நடவடிக்கைகள் (சிரமதான செயற்பாடுகள், சமய நடவடிக்கைகள், கல்விச் செயற்பாடுகள், கலாச்சார செயற்பாடுகள், சுகாதார செயற்திட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள்) போன்ற நிகழ்வுகளும் இதனுள் அடங்கும்.

Untitled

Related posts: