வேலை நிறுத்த போராட்டம் மனிதாபிமானமற்றது – இராதாகிருஸ்ணன்!

Saturday, June 24th, 2017

நாடளாவிய ரீதியாக தற்போது டெங்கு நோய் வெகுவாக பரவி வருகின்ற நிலையில் வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் மனிதாபிமானமற்ற செயல் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்

“இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் பல முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய வைத்தியர்கள் அதனை செய்யாமல் தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்.  அவர்களுடைய கோரிக்கைகள் அல்லது போராட்டங்கள் என்பவை பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சி செய்வதைவிட்டு இவ்வாறான செயற்பாடுகளால் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

பாடசாலையில் அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமது பாடசாலையின் சுற்றுச் சூழலை பாதுகாப்பாகவும் மிகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து டெங்குக்கு எதிராக செயற்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே இதனை ஒழிக்க முடியும். தனியாக அரசாங்கத்தால் மாத்திரம் இதனை செய்ய முடியாது.

இன்று பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார அமைச்சிற்குள் புகுந்து அங்குள்ள கட்டடங்களுக்கும் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கின்றார்கள். இவை தவறான செயற்பாடுகள் முன்னுதாரணங்கள். பல்கழைக்கழக மாணவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள். போராட்டங்கள் நடத்துவது கருத்துக்களை வெளியிடுவது இவை ஜனநாயக ரீதியான செயற்பாடுகள். ஆனால் வன்முறையில் ஈடுபடுவது தவறான செயற்பாடுகள். எனவே இதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.

Related posts: