வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!

Thursday, June 30th, 2016

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியான வித்தியா வாழ்ந்த கிராம சேவகர் பிரிவிலுள்ள குடும்பங்களின் விபரங்கள் தொடர்பான பூரண அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கவேண்டும் என ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

குறித்த மாணவியின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே நீதிவான் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நீதிவான் மேலும் குறிப்பிடுகையில் –

குறித்த மாணவி வாழ்ந்த கிராம சேவகர் பிரிவில் படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வாழ்ந்த குடும்பங்களின் விபரங்கள் தொடர்பான பூரண அறிக்கையையும், இச் சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் இப் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் தொடர்பான பூரண அறிக்கையையும், சமர்ப்பிக்கவேண்டும். அத்துடன் இச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் இப் பிரதேசத்தில் வசித்து சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் வேறு இடங்களுக்கு இடம்மாறிச் சென்றவர்கள் தொடர்பான பூரண அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவேண்டும்.

இச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் அங்கு வாழ்ந்த குடும்பங்கள் தொடர்பாகவோ அல்லது அங்கிருந்து இடம்மாறிச் சென்றவர்கள் தொடர்பாகவோ ஆவணங்கள் அல்லது அறிக்கைகளை குறித்த பகுதிக்கான கிராம சேவகர், பிரதேச செயலரிடம் ஒப்படைத்திருந்தால் அவ்வறிக்கைகளை பிரதேச செயலர் அடுத்த வழக்கு தவணைக்கு முன்னதாக நீதிமன்றில் ஒப்படைக் கவேண்டும்.

இவ்வழக்கு விசாரணை தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற பகுதியை சேர்ந்த அல்லது இவ் வழக்கு தொடர்பாக உண்மையறிந்தவர்கள் எந்தளவிற்கு முன்வந்து இப் புலன்விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ அந்தளவிற்கு விசாரணைகளை விரைவாக நடத்த முடியும். மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ் விசாரணையை மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே சம்பவம் தொடர்பாக உண்மையறிந்தவர்கள் முன்வந்து வழக்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியாக கருதமுடியாது என்றார்.

இதேவேளை வித்தியாவின் படுகொலை தொடர்பில் தற்போது முக்கிய சாட்சிகள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக குறித்த வழக்கை விசாரணை செய்துவரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.நிஷாந்த சில்வா மன்றில் தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 13ம் திகதி வரை நீதிவான் ஒத்திவைத்தார்.

Related posts: