விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு!

Wednesday, October 25th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நெல் விதைப்பு நடைபெறும் நிலையில் என்ன விலை கொடுத்தும் விதை நெல்லைப் பெற முடியாதுள்ளது.

இவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மழையை நம்பி மானாவாரியாக மேற்கொள்ளும் நெற்செய்கைக்கான விதைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தால் இந்த ஆண்டு சுத்திகரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்ட 3 ஆயிரத்து 500 புசல் விதை நெல் நியாய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பி.ஜி.406, ஏ.ரி.362 ஆகிய நெல்லினங்களே வழங்கப்பட்டன. ஹேலீஸ் நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட விதை நெல்லினங்களை விவசாயிகளுக்கு வழங்கியது.

கடந்த ஆண்டு செய்கை செய்யப்படாதிருந்த வயல்கள் இம்முறை செய்கை பண்ணப்படுகின்றன. அதனால் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. விவசாயிகள் மரபு வழியாகத் தமக்கான விதை நெல்லைத் தயார் செய்ய முடியாமல் போனமையும் விதை நெல் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

தனியார் விதை நெல் ஒரு புசல் 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர். இருந்த போதும் தேவையான அளவு அவற்றைப் பெற முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts: