வழக்கு பொருளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது!

Saturday, March 18th, 2017

நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவிருந்த 16 தேக்கு மரக் கட்டைகளை இரகசியமான முறையில் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் இந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தங்கொட்டுவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட தேக்கு மரக்கட்டைகள் நேற்று மாரவில நீதவான் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படவிருந்தது.

எனினும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்காது வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்றாக சிலாபம் பொலிஸ் அத்தியட்சகருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் குழு அனுப்பி வைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் களஞ்சியப்படுத்தியிருந்த கைப்பற்றிய மரக்கட்டைகளை அனுமதியின்றி பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: