வலிகாமம்  தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் மூன்று வீதிகள் புனரமைப்பு

Tuesday, April 19th, 2016

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் சுன்னாகம் ஐயனார் வீதியின் புனரமைப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குப்பிளான் வடக்குச் சமாதி கோவில் வீதியின் ஒரு பகுதி தாவடி வடக்குப் பாணப்பாய் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் தி. சுதர்சன் தெரிவித்தார்.

நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாதிருந்த சுன்னாகம் ஐயனார் கோவில் வீதியின் புனரமைப்பு வேலைகள் கடந்த பெப்ரவரி மாதம் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த வீதியின் புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் மே மாதமளவில் நிறைவுக்கு வரும்.

குப்பிளான் வடக்குச் சமாதி கோவில் வீதியின் சுமார் 600 மீற்றர் நீளமான பகுதியின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே கடந்த வருடம் மே மாதம் ஆரம்பிக்கப்பட்டுச் செய்யப்பட்டிருந்தது. எஞ்சிய 300 மீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வீதியின் எஞ்சிய பகுதிப் புனரமைப்பிற்கு இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

700 மீற்றர் நீளமான தாவடி வடக்குப் பாணப்பாய் வீதியின் புனரமைப்பு வேலைகளுக்கு ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: