வலது கையைத் துண்டாடிய 4 பேருக்கு ஒத்திவைத்த சிறை ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கவும் யாழ்ப்பாண மேல்நீதிமன்று உத்தரவு

Wednesday, February 21st, 2018

இளைஞரின் வலது கையை வெட்டித் துண்டாடிய 4 குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்று 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருடங்களக்கு ஒத்திவைத்தது.

பாதிக்கப்பட்டவருக்கு நால்வரும் 12 லட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தது.

நாரந்தனையில் 2015 ஆம் ஆண்டு அன்ரனி எட்வேட் கென்றி (வயது -27) என்பவர் மீது தாக்குதல் நடத்தி அவரது வலது கையைத் துண்டாடி கொலைசெய்ய முயன்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அதே இடத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீதான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாண மேல்நீதிமன்றுக்குப் பாரப்படுத்தப்பட்டது. அது பற்றிய விசாரணைகள் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்பட்ட 4 பேரும் தம்மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்கின்றனர். அதன்படி குறித்த குற்றங்களுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் தலா 3 லட்சம் ரூபா வீதம் 12 லட்சம் ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அதனை 6 தவணைகளில் வழங்க வேண்டும். இரண்டு தவணைகள் தொடர்ச்சியாக வழங்கத் தவறின் அவர்களுக்கு 5 வருடங்களுக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தவிர 5 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஸாந் முற்பட்டிருந்தார்.

Related posts: