நீரிழிவு நோயின் தாக்கத்தால் சுன்னாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர்!

Thursday, November 10th, 2016

நீரிழிவு நோயின் தாக்கத்தால் மன விரக்தியுற்ற இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் யாழ்.சுன்னாகம் கடவைப்புலம் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாலிங்கம் மயூரன் (வயது-32) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்துள்ள குறித்த இளைஞருக்கு மூன்று வயதில் அழகிய ஆண் குழந்தையொன்றுமுள்ளது. அத்துடன் இவர் சுன்னாகம் நகரத்திற்கு அண்மையாகவுள்ள விறகுசாலையொன்றின் உரிமையாளருமாவார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன் நடாத்தப்பட்ட பரிசோதனையில் மேற்படி இளைஞருக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்களிருப்பது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் தனக்கு இளம் வயதிலேயே நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பது குறித்துத் தன் குடும்பத்தவர்களுடன் மன விரக்தியுற்ற நிலையில் அடிக்கடி கதைத்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மாதாந்தக் கிளினிக்குக்காக சென்ற போது வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் நீரிழிவின் தாக்கம் முன்னரை விட அதிகரித்த நிலையிலிருந்தமை கண்டறியப்பட்டது. இதனால், வீட்டிற்கு வந்த இளைஞர் மிகவும் மனவிரக்தியுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டிலுள்ள அனைவரும் உறக்கத்திற்குச் சென்ற பின் வீட்டிற்கு முன்னாலுள்ள ஆட்டுக் கொட்டிலில் தனது கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய அவரை    நேற்று அதிகாலை-12.30 மணியளவில் மனைவி கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் மல்லாகம் நீதவானும் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை நடாத்தியுள்ளார்.

1459497513-3289

Related posts: