வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது – சர்வதேச வர்த்தகத்தை கையாளும் விசேட அலுவலகம் இலங்கையில் நிறுவப்படும் – சமூக ஒன்று கூடல் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022

சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை இலங்கையில் நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நேற்றுமுன்தினம் (15) மாலை நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக இலங்கை உருவாக வேண்டும். அத்துடன், வர்த்தக ஒருங்கிணைப்பே இந்தியாவுடனான இலங்கையின் உறவைத் தீர்மானிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி –

1946 இல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் முதலாவது ஆசிய உறவுகள் தொடர்பான மாநாடு நடந்தது. இது ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க வழிவகுத்தது. பின்னர் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஒன்றிணைய அது வழிவகுத்தது.

அதற்கமைய ஏனைய நாடுகளின் பிரதானியாக இந்தியா இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆசியாவின் மூன்று முக்கிய சக்திகள்.

இந்திய பொருளாதார உறவுகளை வென்றெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சகாப்தத்தில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பைக் காண்கிறீர்கள்.

தெற்காசியாவில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கள் கருத்துப்படி, இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக ஒருங்கிணைப்பு உருவாக வேண்டும்.

இந்தியாவுடன் வர்த்தக ஒருங்கிணைப்பை எட்டுவது முக்கியமானது. 2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக உருவாக வேண்டும். உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு போதுமான மொத்த உள்நாட்டு வருமானம் இருக்க வேண்டும்.

இல்லை என்றால் வளமான பொருளாதாரம் இருக்க வேண்டும். வர்த்தக ஒருங்கிணைப்பே, அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது. வர்த்தக ஒருங்கிணைப்பு பொருளாதார அடிப்படையை வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் சிறந்த அரசியல் உறவுக்கு பொதுவான பொருளாதார அடித்தளம் அவசியமாகும்.

2018, 2019 ஆம் ஆண்டுகளில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களை செய்துகொள்ள முயற்சித்தோம். அதற்குத் தடையாக இருந்த குழுக்கள் அனைத்தையும் நிறுத்தினேன். இதனைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல் உயர்மட்டத்துக்கு அறிவித்துள்ளேன்.

எவ்வாறாயினும், இலங்கை தனது சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால், நாம் வேறுவிதமாக சிந்திக்க வேண்டும். அதற்காக, அனைத்து சர்வதேச வர்த்தகத்தையும் கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகமொன்றை நிறுவ முடிவு செய்துள்ளேன்.

நிதி அமைச்சின் கீழ் இந்த அலுவலகம் நிறுவப்படும். இதன்மூலம் எமது வர்த்தகத்தை, சர்வதேச வர்த்தகம் வரை விரிவுபடுத்த முடியும். நிறுவனங்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நமது வர்த்தகச் செயற்பாடுகளை எளிதாக்க தனியான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நிலுவையிலுள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்பட மேலும் பல வாய்ப்புகள் உள்ளன. புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி, சுற்றுலா, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் நாம் இணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: