வட மாகாணசபை மீது இனவாத வழக்கு? – ஹெல உறுமய!

Friday, January 6th, 2017

இனவாத செயற்பாடுகளை வட மாகாணசபை நிறுத்தப்படாவிட்டால் வழக்குத் தொடர நேரிடும் என ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இணைத் தவிசாளர் ஹெடிகல்லே விமலசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

வட மாகாணசபை இனவாத மற்றும் பிரிவினைவாத பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வருகின்றது. இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், மாகாணசபைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர நேரிடும்.

வட மாகாணசபையின் இனவாத செயற்பாடுகளை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் போர் வெற்றியின் பலன்களை நாட்டுக்கு வழங்க முடியாது போகும். வட மாகாணசபை எல்லைக்குள் பௌத்த விகாரைகள் அமைப்பது தொடர்பில் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.

தெற்கின் கள் வகைகள் வடக்கில் தடை செய்யப்படும் வகையிலான தீர்மானம் பொருளாதார பிரிவினைவாதமாகும். இவ்வாறு நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் பண்டங்கள் சேவைகள் பரிமாற்றம் செய்வதில் நெருக்கடி நிலைமை ஏற்படும்.

வட மாகாணசபை தொடாந்தும் இனவாத, கடும்போக்குவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதனை மீளவும் மீளவும் உறுதி செய்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

8541

Related posts: