வடமாகாணம் தென்னிந்திய மாநிலங்களுடன் முதலீட்டுத் தொடர்புகளை அதிகரிப்பது நன்மை பயக்கும் :  மத்திய வங்கியின் ஆளுநர்!  

Tuesday, August 23rd, 2016

வடமாகாணத்தின் நியம வளர்ச்சி  2015 ஆம் ஆண்டு 12.1 வீதமாக இருந்திருக்கின்றது. சராசரித் தேசிய வளர்ச்சி  7 வீதமாகவிருக்கின்ற போது வடமாகாணத்தின் நியம வளர்ச்சி  0.1 வீதமாக இருக்கின்றது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் வடமாகாணம் 3.5 வீதம் பங்களிப்புச் செய்கிறது.தென்னிந்திய மாநிலங்களுடன் முதலீட்டுத் தொடர்புகளை வடமாகாணம் அதிகரிப்பது நன்மை பயக்கும்  எனத் தெரிவித்தார்  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி.

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஒழுங்கமைப்பில்,  வடமாகாண முதலீட்டாளர்கள் சபையின் எற்பாட்டில் நாட்டின் “தேசிய வளர்ச்சிக்கு வடமாகாணத்தின் முதலீட்டாளர்கள் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளிலான மகாநாடு நேற்று (22) யாழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது “எதிர்காலத்தில் தேசியளவில் இருக்கின்ற முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் மற்றும்  வடமாகாணத்தின் வாய்ப்புக்கள்” தொடர்பாக விசேட கருத்துரையை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு ஆற்றிய நீண்ட  உரையில் தெரிவித்த முக்கிய விடயங்கள் சில வருமாறு-

வடமாகாணத்தில் தேசிய நல்லிணக்கத்தின் மிக முக்கிய பகுதியாக ஒன்றிணைக்கப்பட்ட நாட்டினில்  வடமாகாணத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். வடமாகாணத்தின் பொருளாதாரம் அரசினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற பெளதீக, சமூக உட்கட்டுமானங்களுக்கு ஊடாக தனியார் துறையினரின் முதலீட்டுக்களை ஊக்குவிப்பதன் மூலம்  வடமாகாணத்தின் முதலீட்டுச் சூழலை வளப்படுத்த முடியும். அந்த முதலீட்டுச் சூழல் வடமாகாணத்தின் விசேட தேவைகளை வரையறுக்கும் வகையில் அமைய வேண்டும். எனவே, இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

வடமாகாணத்தின் விவசாயத்துறை,மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை ஆகிய துறைகள் வளர்ச்சி கண்டு வருவது நல்லதொரு அறிகுறியாகவுள்ளது. வடமாகாணம் தேசிய விநியோகக் கட்டமைப்பிலே முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக மாறி வருகிறது. அதற்கான விநியோக ஒழுங்கு முறைக்குள் வடமாகாணம் வந்திருக்கின்றது. முதலீடுகளையும், மூலப் பொருள்களையும் உருவாக்குபவர்கள் வடமாகாணத்தை நோக்கி நகர்கின்ற அறிகுறிகள் தென்படுகின்றன.  புதிய தொழில் முறையாக உல்லாசப் பிரயாணத் துறைத் திட்டங்கள் வகுக்கப்படக் கூடிய வாய்ப்புக்களிருக்கின்றன. வவுனியாவில், கிளிநொச்சியிலும் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. முதலீட்டுத் துறைக்கு மிகவும் முக்கியமான தொலைத் தொடர்புத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தனியார் துறை மூலம் ஊக்குவிக்கப்படும் முதலீடுகள் இலங்கையில் துரிதப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு, தென்கிழக்காசிய நாடுகளில் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி  மூலமே 90 வீதமான வருமானம்  கிடைக்கிறது.  ஆனால், இலங்கையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் 17 வீதமான வருமானமே ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. தற்போது கடன் சுமையில் அரசாங்கம் இருக்கின்றது. ஆகவே, கடன்படு சுமையைத் தவிர்த்துத் தேசிய பொருளாதாரத்தினைக்   கட்டியெழுப்ப நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் என்றார்.

Related posts: