வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதே நன்மை பயக்கும்!

Monday, July 11th, 2016

வடக்குக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைந்தால் தமிழ்மக்கள் நீண்ட  காலத்தில் அதன் நன்மையைப் பெறுவதற்கு வழி சமைப்பதாகவிருக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் ஒன்றாகப் பொருளாதார மத்திய நிலையம் அமைவது பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனைப் பற்றிய கருத்தாடலைத் தவிர்க்க விரும்பிய புலமை சார் சமூகத்திற்கு மேலும் மேலும் ஏற்பட்ட சமூகம் சார்பான வற்புறுத்தலினால் இத்தகைய அறிக்கையை வெளியிட்டு அதற்கான நியாயப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் உள்ளது.

போரினால் பாதிப்படைந்த வடபகுதியில் பொருளாதார மத்திய நிலையம் அமைத்தல் தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதனையும், அது தொடர்பான செய்திகள் கவலையளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பது அதன் மூலம் நன்மையைப் பெற்றுக் கொள்ளவிருக்கும் மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம். இது அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தீர்மானிக்க வேண்டிய ஒரு விடயம் மாற்றப்பட்டுள்ளமை வேதனைக்குரியது.

பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பது வாக்கெடுப்பொன்றினால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமன்று. மாறாக இது அறிவு பூர்வமானதாகப் பல கருத்தியல் மாற்றங்களின் ஊடாகத் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதனைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்த வகையில் பொருளாதார மத்திய நிலையம் எதிர்கால விஸ்தரிப்புக்கள் மற்றும் பெறுமதி சேர்க்கக் கூடியவாறு பல கைத்தொழில்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையில் வடமாகாணத்திலிருக்கக்  கூடிய எல்லா மாவட்ட மக்களும் அதிலிருந்து நன்மை பெறக் கூடிய வகையில் வடக்கு நோக்கியதாக அமையப் பெறுவதே அறிவு பூர்வமானதாகவிருக்கும்.

அதாவது தற்போதிருக்கும் வாதாபி பிரதி வாதங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட எல்லை விளிம்பில் ஓமந்தையில் பொருளாதார வலயத்தை அமைப்பது பொருத்தமானது என பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: