குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டல்: இலங்கைக்கு முதலிடம்!

Thursday, July 28th, 2016

குழந்தைகளுக்கான பால் மா தொடர்பான விளம்பரங்கள் குறித்த சட்டத்தின் சரத்துக்களைத் திருத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹீபால நேற்று(27) தெரிவித்துள்ளார்.

சில பால் மா வகைகளின் விளம்பரங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு நிறுவனங்களிலும் தாய்மார் தம் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை கூட்டக் கூடிய பிரத்தியேக இடங்களை உருவாக்குவது நல்லது என்றும் சுட்டிக்காட்டினார்.

வருடா வருடம் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதிவரையான ஒரு வார காலப் பகுதி தேசிய தாய்ப்பாலூட்டல் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் சுகாதார அமைச்சின் கீழுள்ள சுகாதாரக் கல்விப்பணியகம் நேற்று ஒழுங்கு செய்த செய்தியாளர் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் கருத்தரங்கில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:

குழந்தைகளுக்கான பால் மா விளம்பரங்களைத் தடை செய்வதற்காகப் பலவித நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றாலும் குழந்தைகளுக்கான பால் மா தொடர்பான விளம்பரங்களைக் குறைக்க வேண்டும். அதற்கான சட்ட வறைமுறையொன்றை வலுப்படுத்துவது அவசியம். அதனால் இது தொடர்பான சட்டங்களின் சரத்துக்களில் திருத்தங்களைச் செய்வதற்காக நிபுணத்துவக் கமிட்டியொன்றின் மூலம் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

சில பால் மா வகைகளின் விளம்பரங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானது. அதேநேரம் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரமே வழங்கப்பட வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டல் தொடர்பாக 2012 ஆம் ஆண்டில் 51 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், 2016 ஆம் ஆண்டில் 121 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் தாய்ப்பால் ஊட்டலில் இலங்கையே முதலிடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது எமக்கு பெருமை தான். என்றாலும் தற்போது இந்நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்த முதல் ஒரு மணித்தியாலயத்திற்குள் தாய்ப்பால் வழங்கும் வீதம் 92 ஆகக் காணப்படுகின்றது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: