வடக்கில் விதை நெல்லுக்கு பற்றாக்குறை ஏற்படும் – வடக்கு பிரதி விவசாயப் பணிப்பாளர்!

Wednesday, July 19th, 2017

கடந்த காலபோக நெற்செய்கையில் ஏற்பட்ட அழிவால் இம்முறை விதை நெல்லுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே விவசாயிகள் பெரும் போக நெற்செய்கைக்குத் தற்போதே முன்மாதிரியான தயார்ப்படுத்தலில் ஈடுபட வேண்டும். என வடக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும்போக நெற்செய்கைக்கு விவசாயிகள் தற்போதே தயாராக வேண்டும். செய்கையாளர்கள் தமது வயல் நிலங்களைச் சீர்செய்தும் அதற்கான விதை நெல்லைத் தற்போதே கொள்வனவு செய்து தயாராக இருக்க வேண்டும். சுமார் 12ஆயிரம் வரையிலான ஹெட்ரேயர் நிலப்பரப்பில் இந்த முறையும் விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடவுள்ளனர்.

செப்ரேம்பர் மாத கடைசியில் நெற்செய்கையை அநேகமான விவசாயிகள் மேற்கொள்வார்கள். செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்மாதிரியாக விவசாயிகள் தற்போதே செய்கைக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பிக்க வேண்டும். முக்கியமாக விதை நெல்களை விவசாயிகள் தற்போதே கொள்வனவு செய்து வைத்திருக்க வேண்டும். செய்கை ஆரம்பிக்கும் காலப்பகுதியில் விதை நெல்லுக்கு விவசாயிகள் அலைந்து திரிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பரந்தன் விவசாய திணைக்களம் மற்றும் குடாநாட்டு விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் போன்றவற்றில் விதை நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளன அவை நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் .2016 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது போதிய மழை வீழ்ச்சி இல்லாமையால் நெற்செய்கை பாதிக்கப்பட்டது. இதனால் இந்த முறை விதை நெல்லுக்கும் பற்றாக்குறை ஏற்படலாம். என்றார்.

Related posts: