ரூபா 135 மில். மோசடி; சஷி வெல்கம 22 வரை விளக்கமறியலில்!

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி திலும் வெல்கம நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த குமார வெல்கமவின் உறவினரான இவர், போக்குவரத்து சபையின் தலைவராக இருந்தபோது போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான ரூபா 135 மில்லியனை (ரூபா 13.5 கோடி) மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன், இ.போ.ச. பஸ்களுக்கான அதிர்ச்சி உறிஞ்சிகளை (வில் தகடு) விநியோகித்து வந்த ‘நந்தன ஒட்டோ’ தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான எல். நந்தன பெரேராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், இ.போ.ச.வின் நிதியை மோசடி செய்தமை மற்றும் அதன் விசுவாசத்திற்கு பங்கம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கொழும்பு மேலதிக பதில் நீதவான் ருக்மணி லியாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Related posts:
|
|