மாவட்டங்களுக்குரிய உற்பத்திப் பொருட்களைத் தனித்தனியே விற்பனை செய்யும் பொறிமுறைய உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் ரங்கன் கோரிக்கை!

Tuesday, July 6th, 2021

“விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. அதனால், பொருளாதார மத்திய நிலையங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குரிய உற்பத்திப் பொருட்களைத் தனித்தனியே விற்பனை செய்து கொள்ளக்கூடிய வகையிலான பொறிமுறைய ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.” என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளை ஜனாதிபதி கொட்டபய ராஜபக்ச கடந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போதே இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் ரங்கன்  சேதுகாவலர் ஜனாதிபதியிடம் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை “வன ஜீவராசிகளுக்குத் தேவையான உணவுகளை, வனவளப் பிரதேசங்களுக்குள்ளேயே உற்பத்தி செய்வதன் மூலம், மனிதர்களுக்கும் வன ஜீவராசிகளுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் ரங்கன் சேதுகாவலர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் “வீடுகளில் பூச்சாடி வைத்திருக்கும் பழக்கம், எம் அனைவருக்கும் உண்டு. அதனால், எமக்குத் தேவையான உணவு உற்பத்திகளை, பூச்சாடிகள் ஊடாக, இயற்கை முறையில் உற்பத்தி செய்துகொள்ளும் பழக்கம் எமக்குள் ஏற்பட வேண்டும். அதனை, சிறு பராயம் முதலே எமது குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களை அதைச் செய்ய வைப்பதன் மூலம், எதிர்காலச் சந்ததி, விவசாயத்தை அறிந்த – இரசாயனப் பசளைக்குப் பழக்கப்படாத சந்ததியாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த  60 ஆண்டுகாலத்தில் இலங்கையின் 11 இலட்சம் விவசாயிகள், 17 ஆயிரம் விவசாயச் சங்கங்கள் மற்றும் 563 விவசாய சேவை மையங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் கட்டமைப்பாகிய குறித்த சங்கத்தின் முதலாவது தமிழ் பிரதி தலைவர் ரங்கன்  சேதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: